சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த லிங்கா தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் ஆந்திர பிரதேசத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விரைவில் நிவாரண தொகையை அறிவிப்பதாக கூறியிருந்தார். அவர் தெரிவித்தபடியே நேற்று முன் தினம் அவர் ரூ.5 லட்சம் ஆந்திர மாநில முதல்வரின் பெயரில் கர்நாடகா வங்கி செக் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த செக் குறித்து ஒருசிலர் டுவிட்டர் இணையதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் ரஜினிகாந்த், ஆந்திராவில் ஏற்பட்ட புயலுக்கான நிவாரண நிதியாக கர்நாடக வங்கியின் செக் கொடுத்துள்ளார் என்றும், தமிழகத்தில் இருந்து சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அவர் தமிழக வங்கியில் டெபாசிட் செய்யாமல் கர்நாடக வங்கியில் டெபாசிட் செய்வதில் இருந்தே அவருடைய மொழி வெறி தெரிகிறது என்றும் சிலர் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளனர்.
ஏற்கனவே லிங்காவுக்கு எதிராக ஒருசிலர் வேண்டுமென்றே வதந்திகள் பரப்பி வரும் நிலையில் ரஜினி எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து விமர்சனம் செய்து வருபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி ரசிகர்களும் அதே டுவிட்டரில் எதிர் விமர்சனம் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.