எண்ணெய் நிறுவனங்களின் புதிய கெடுபிடிகளால் கேஸ் சிலிண்டர்கள் டீலர்கள் வரும் 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை கேஸ் சிலிண்டர் டீலர்கள் அதிக விலை பெற்று ஓட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு விற்பதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து திடீர் சோதனையில் ஈடுபடுகின்றன. முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சமையல் கேஸ் சிலிண்டர்கள் டீலர்ஷிப் ரத்து செய்யப்படுகிறது. மேலும் வர்த்தக சிலிண்டர்களின் விற்பனையை அதிகரிக்கவும் நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களில் இந்த போக்கை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 19ஆம் தேதி முதல் காலவரையின்றி சிலிண்டர் விற்பனையை நிறுத்த எல்.பி.ஜி. டீலர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழக முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.