எனது மகன் நிச்சயம் திரும்பி வருவான். மாயமான விமானத்தில் இருந்த வீரரின் தாயார் பேட்டி
இந்திய கடலோர காவற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று கடந்த 8ஆம் தேதி ஆம்லா ஆபரேஷன் ஒத்திகையின்போது திடீரென காணாமல் போனது. இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த விமானத்தில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சுபாஷ், எம்.கே.சோனி, வித்யா சாகர் ஆகியோர் இருந்தனர்.
இவர்களில் சென்னையை சேர்ந்த சுபாஷ் அவர்களது தாயார் பத்மா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் தனது குறித்து கூறியபோது, “கடந்த 8 ம் தேதி காலையில் பணிக்கு செல்லும்போது மாலையில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று சுபாஷ் கூறினான். பின்னர் மாலையில் போன் செய்து கூடுதல் பணி இருப்பதால் வருவதற்கு தாமதமாகும் என்றான். இரவு 11 மணி வரை வீட்டுக்கு வராததால் நாங்கள் பல முறை போன் செய்து பார்த்தோம். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.
அதிகாலை 3 மணியளவில் எங்கள் வீட்டுக்கு இந்திய கடலோர படையின் 2 வீரர்கள் வந்து விமானம் மாயமானதையும், அதைத் தேடும் பணி நடந்து வருவதையும் தெரிவித் னர். அதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். நாட்டுக்கான பணியில் ஈடுபட்டிருக்கும் அவனுக்கு ஒன்றும் ஆகாது. நிச்சயம் திரும்பி வருவான். அவனுக்காக எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
சுபாஷுக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், இஷான் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சுபாஷின் தந்தை சுரேஷ், சென்னை துறைமுகத்தில் தொழில்நுட்ப பணியாளராக உள்ளார். சுபாஷ் பி.டெக் முடித்து விட்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பைலட் பயிற்சி பெற்றுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் கடலோர பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.