கடந்த 15 நாட்களாக நடந்துவந்த காமன்வெல்த் போட்டிகள் வண்ணவண்ண நிகழ்ச்சிகளுடன் நேற்றுடன் முடிவடைந்தது.
ஜுல்லை 23 ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமானது. இதன் நிறைவு விழா கிளாஸ்கோ நகரில் உள்ள ஹம்ப்டன் அரங்கில், வாணவேடிக்கைகள் மற்றும் அதிர வைக்கும் இசை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில், நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் பல அற்புதமான மேடையமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் நடனமாடினர். ஸ்காட்லாந்தின் பாரம்பரிய பேண்ட் வாத்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன், பல்வேறு நடன நிகழ்ச்சிகளை கலைஞர்கள் அரங்கேற்றி மேடையில் இருந்த பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.
அதன்பின்னர் அடுத்த காமன்வெல்த் மாநாட்டை வரும் 2018 ஆம் ஆண்டு நடத்தவிருக்கும் ஆஸ்திரேலியா நாட்டிடம் காமன்வெல்த் போட்டிகளுக்கான அதிகாரபூர்வ கொடி வழங்கப்பட்டது. அதிகாரபூர்வமான அந்த கொடி விழா அரங்கை வலம் வந்தது. ஆஸ்திரேலியாவின் பிரபல பாடகி கைலி மினோக், தமது வசீகர குரலில் இனிமையான பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் கைலி மினோக், தமது குழுவினர் உடன் இணைந்து பாடிய ஆல் த லவ்வர்ஸ் என்னும் பாடல் அரங்கத்தை அதிர வைத்தது.
அதையடுத்து, ஸ்காட்லாந்து நடிகர் சியாகான் ப்ளூ மற்றும் பாடகி டௌகி மாக்லென்ஆகியோர் துள்ளல் மிகுந்த பாடல்களை பாடி பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர். இறுதியில் இரவுப்பொழுதை பகலாக்கும் வகையில் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.