வேதா இல்லத்துக்காக வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அமைச்சர் சி.வி.சண்முகம்
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் வாழ்ந்த வீடு நினைவிடமாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், ஓபிஎஸ் அணியினர்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ‘வேதா இல்லம்’ தற்போது சசிகலா குடும்பத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் நேற்று திடீரென ‘வேதா இல்லத்தை நினைவிடமாக்க நடவைக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
முதல்வரின் இந்த அற்விப்பு குறித்து கருத்து கூறிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ‘ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன்பு, சட்டப்படி எங்களின் கருத்தை கேட்க வேண்டும்’ என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன்பு, எங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் தாயாரும், தங்களின் பாட்டியுமான சந்தியாவின் உயில்படி வேதா இல்லம் தனக்கும், தீபாவுக்குமே சொந்தம் எனவும் தீபக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடமாக்க வேதா இல்லத்தை வழங்க தாங்கள் தயாராக இருந்தாலும், அரசு சட்டமுறைகளை பின்பற்றியே அதை நிறைவேற்ற வேண்டும் என தீபக் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாரிசுதாரர்கள் உரிமை கோரினால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.