மாநகர பேருந்துகளில் ஒருநாள் பயண டிக்கெட்டுக்கு திடீர் கட்டுப்பாடு. பயணிகள் அவதி

மாநகர பேருந்துகளில் ஒருநாள் பயண டிக்கெட்டுக்கு திடீர் கட்டுப்பாடு. பயணிகள் அவதி

busமாநகர பேருந்துகளில் ஒருநாள் முழுவதும் விருப்பம்போல் பயணம் செய்யும் ரூ.50 டிக்கெட்டுக்கு இனி அடையாள சான்றிதழ் அவசியம் என்ற புதிய உத்தரவால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். முறைப்படி அறிவிப்பின்றி திடீரென அடையாள சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளதால் பயணிகளுக்கும் கண்டக்டர்களுக்கும் இன்று காலை முதல் வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னை மாநகர போக்கு வரத்துக்கழக பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக ரூ.50 கட்டணம் கொண்ட ஒரு நாள் பயணச்சீட்டு கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. தினமும் அதிக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இந்த டிக்கெட் ஒரு வரப்பிரசாதமாக இருந்த நிலையில் திடீரென இன்று முதல் ஒரு நாள் பயணச்சீட்டு பெற பயணிகள் கட்டாயம் அடையாளச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மாநகர பேருந்துகளில் அடையாளச் சான்றிதழ் இருப்பவர்களுக்கு மட்டுமே ரூ.50 பயணச்சீட்டு வழங்கப்படும் என நடத்துநர்கள் தெரிவித்தனர். இதனால் பயணிகளுக்கும் கண்டக்டர்களுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறும்போது, “அடையாள சான்று இருந்தால் மட்டுமே ரூ.50 பயணச்சீட்டு வழங்கப்படும் என கண்டக்டர்கள் தெரிவிக்கின்றனர். முறையாக எதையும் அறிவிக்காமல் திடீரென அடையாளச் சான்று இருந்தால் தான் ஒருநாள் பயணச்சீட்டு வழங்குவேன் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “ஒரு நாள் பயணச் சீட்டை தினமும் 5 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். பயணிகள் சிலர் பயணம் செய்து விட்டு, வேறொருவரிடமும் அந்த பயணச் சீட்டை கொடுத்து விடுகிறார்கள். எனவே, உண்மையான பயணிகள் பயணம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் ஏதாவது, ஒரு அடையாளச் சான்று கேட்கப்படுகிறது. இதன்மூலம் முறைகேடுகளை தடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply