இந்திய மண்ணில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிராக கேடு விளைவிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, நாடு முழுவதும் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ‘ஜன் கல்யான் பார்வ்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீரில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ”ஜனநாயகம் என்பது அனைத்து தரப்பினருடனும் திறந்த மனதுடன் தொடர்பை ஏற்படுத்துவது ஆகும். அந்தவகையில் யாருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்.
ஆனால், இந்திய மண்ணில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்புவது, பாகிஸ்தான் கொடியை ஏந்திச்செல்வது போன்றவற்றை ஒருபோதும் பொறுக்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காஷ்மீர் மாநில அரசை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது.
காஷ்மீர் மாநில இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை பார்க்கும் போது கவலையாக உள்ளது. இவ்வாறு வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் பாகிஸ்தான் கொடியை ஏந்தியும், அந்த நாட்டுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியும் வருகிறார்கள். இது நல்லதல்ல. இந்த இளைஞர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, தவறான பாதையில் நீங்கள் செல்லாதீர்கள் என்பதுதான். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை.
பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு வளர்ச்சியை விரும்பினால், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். இந்தியாவுக்கு எதிராக அந்த நாடு மேற்கொள்ளும் கொடூரமான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். எங்கள் ராணுவம், துணை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியாவின் பெருமை, நேர்மை மற்றும் இறையாண்மைக்கு எதிராக கேடு விளைவிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.