இணையதளச் சேவை: டிராய் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு
இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்கள் விதிக்க முடியாது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) விதித்துள்ள தடைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
சமநிலை இணையதளச் சேவைக்கு ஆதரவாகப் போராடி வந்தவர்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவைத் தெரிவித்து வந்தார். இப்போது அது தொடர்பாக டிராய் எடுத்துள்ள முடிவு, சமநிலை இணையதளச் சேவைக்கு ஆதரவாகப் போராடியவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். இதன் மூலம் இணையதளச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் செல்லிடப்பேசி அழைப்பு முறிவு விவகாரத்தையும் இந்த அரசு தீவிரமாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார் அவர். முன்னதாக, சமநிலை இணையதளச் சேவை விவகாரத்தில் முடிவெடுப்பதில் அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்துவதாக ராகுல் காந்தி கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார்.