காங்கிரஸை தமிழக கட்சிகள் அனைத்தும் புறக்கணித்துவிட்டதால் தனிமையில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சிக்கு கார்த்திக் புது தெம்பு கொடுத்துள்ளார். நேற்று கார்த்திக்கை அவருடைய வீட்டில் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கார்த்திக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க பேசிவருவதாகவும், மதுரை மற்றும் திருநெல்வேலி தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியலில் தலைகாட்டும் கார்த்திக், இம்முறையும் நாடாளுமன்ற தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். அதிமுகவிடம் கூட்டணி அமைக்கவே முதலில் கார்த்திக் விரும்பினார். ஆனால் அதிமுக தலைமை பெரிய பெரிய கட்சிகளையே கழட்டிவிட்டுவிட்டதால், கார்த்திக்கை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மதுரையில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கார்த்திக் இம்முறை தேர்தலில் நிற்பார் என்றும், திருநெல்வேலியில் அவருடைய ஆதரவாளர் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.