தமிழக சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் குறித்து பேச அனுமதிக்கப்படாததால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து தேமுதிக பிரச்னை குறித்து பேச ஆரம்பித்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் ஸ்டாலின் தொடர்ந்து பேச அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றனர். தொடர்ந்து அவ்ர் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோரும் தேமுதிக உறுப்பினர்களுக்கு ஆதரவாக பேச முயற்சி செய்தபோது அவர்களுக்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “தேமுதிக வை இந்த கூட்டத் தொடர்முழுவதும் சஸ்பென்ட் செய்து இருக்கிறார்கள். இதனால் அடுத்து வரும் பட்ஜெட் தொடரிலும் அவர்கள் பங்கேற்ற முடியாத நிலை உள்ளது. ஆகவே தேமுதிக மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை வைப்பதற்காக அனுமதி கேட்டேன்.
ஆனால் அது குறித்து பேச தொடங்கியதுமே அது அவை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார். தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அது பற்றி பேச அனுமதி வழங்காததால் வெளிநடப்பு செய்தோம்.
கடந்த ஆட்சியின் போது இது போன்ற சம்பவங்களில் எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது.இப்போதும் அது போன்ற கோரிக்கையைத்தான் நாங்கள் வைக்க முன்வந்தோம். ஆனால் ஏற்கவில்லை” என்றார்.
இதேபோல காங்கிரஸ் உறுப்பினர் விஜய தாரணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேமுதிக பிரதான எதிர்க் கட்சி. அந்த கட்சி இல்லாமல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பது சரியில்லை. எனவே அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக எழுந்து நின்றேன் ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்தார்.