நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், கடந்த மன்மோகன் சிங் அரசு இந்தியாவுக்கு மிகப்பெரிய பாவத்தை செய்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி உள்ளார்.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகளால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை துறை அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி, வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி துறைக்கு பொறுப்பு வகித்த காலத்திலும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் மாவட்டம் ஹுசைனிவாலாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ”கடந்த மன்மோகன் ஆட்சிக்காலத்தில் நடந்த நிலக்கரி ஊழலால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, உச்ச நீதிமன்றம் இந்த பிரச்னையில் தலையிட்டது. இந்த விவகாரத்தில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு, நாட்டுக்கு மிகப்பெரிய பாவத்தை செய்துவிட்டது.
204 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டதில் நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைத்துள்ளது. இந்த பணம் ஏழைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.
மத்திய அரசு கொண்டுவர உள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளை வறுமையில் இருந்து போக்கும். விவசாயிகளின் குழந்தைகள் எப்போதும் டெல்லி, மும்பை நகரங்களின் குடிசை பகுதிகளில் தான் வாழ வேண்டுமா? இதற்கு யாராவது கண்டனம் தெரிவித்தார்களா? உண்மை என்னவென்றால், விவசாயிகள் தங்களின் குழந்தைகள் அனைவரும் விவசாயம் தான் பார்க்க வேண்டும் என்று விரும்புவதில்லை. தவறான பிரச்சாரம் செய்பவர்களை விவசாயிகள் நம்பவேண்டாம். மத்திய அரசு அனைத்து வகையிலும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும்” என்றார்.