பிரபல நடிகரை காணவில்லை என காங்கிரஸ் கட்சியினர் புகார். பெரும் பரபரப்பு
பிரபல நடிகரும் கேரள மாநிலத்தின் கொல்லம் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவும் நடிக முகேஷைக் காணவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் போலீஸில் புகார் செய்துள்ளனர். இந்த புகாரை போலீஸார் ஏற்றுக்கொண்டுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழ், மற்றும் மலையாள நடிகர் முகேஷ், தற்போது கொல்லம் தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ-வாக உள்ளார். இந்நிலையில் அவர் குறித்து கேரள மாநில காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்த சிலரது சார்பில் கொல்லம் மேற்கு சரக காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “எம்எல்ஏவாக முகேஷ் தனது தொகுதியில் நடைபெறும் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை; எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து அவரை தொகுதிப் பக்கம் பார்க்க முடியவில்லை. காணாமல்போன அவரை உடனடியாகக் கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார், அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதுடன், அதற்கான ஒப்புகைச் சீட்டையும் புகார்தாரர்களுக்கு அளித்துள்ளனர். கொல்லம் போலீஸாரின் இந்த நடவடிக்கை கேரளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸாரின் இந்தப் புகார் கேலிக்கூத்தானது என பதிலடி கொடுத்துள்ள முகேஷ், தாம் தொகுதியிலிருந்து எங்கும் சென்றுவிடவில்லை என்றும் தொகுதியிலிருந்தபடி மக்கள் பணியை தொடர்ந்து ஆற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து கொல்லம் மேற்கு சரக காவல் நிலைய ஆய்வாளர் ஜி.பினு கூறியபோது, “எம்எல்ஏ முகேஷ் தொடர்பாக, வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸார் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை பணியிலிருந்த உதவி ஆய்வாளர் தவறுதலாக ஏற்றுக்கொண்டுள்ளார். புகாரை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அதற்கான ஒப்புகையை புகார்தாரருக்கு அளிப்பது வழக்கமான நடைமுறைதான்’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.