25 தொகுதிகளுக்கு மேல் இல்லை. திமுக கறார். வெளியேறுகிறதா காங்கிரஸ்?
திமுகவுடன் எந்த நிபந்தனையும் இல்லாமல் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை இல்லாமல் முதல் ஆளாக கூட்டணி அறிவிப்பை அறிவித்த காங்கிரஸ் கட்சி தற்போது தாங்கள் கேட்கும் சீட்டுக்களை திமுக தர மறுப்பதால் தனியாக நிற்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியில் இளங்கோவன், தங்கபாலு, விஜயதாரணி, யசோதா, டாக்டர் செல்லக்குமார், வசந்தகுமார், ப.சிதம்பரம் என்ற பல கோஷ்டிகள் உள்ளன. கோஷ்டிக்கு பத்து சீட்டுக்கள் என்றாலும் 70 சீட்டுக்கள் தேவை. ஆனால் திமுக 25 தொகுதிகளுக்கு மேல் தர மறுப்பதாகவும் இதை வைத்துக்கொண்டு இத்தனை கோஷ்டிகளுக்கு எப்படி பிரித்து கொடுப்பது என்றும் காங்கிரஸ் திகைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் திமுக வட்டாரங்களில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளே அதிகம். தமாக வேறு பிரிந்து சென்றுவிட்டதால் பலவீனமாக உள்ள காங்கிரஸ் இந்த தொகுதிகளை பெற்றுக்கொண்டால் பார்க்கலாம் இல்லையென்றால் அவங்க இஷ்டம் என்பதுபோல் பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினால், தமாகவுக்கு 25 சீட் கொடுத்து கூட்டணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.