கடந்த வருடம் நடந்த பொதுத்தேர்தலிலும், சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலிலும் பெருமளவில் செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சி தற்போது தனது தலைமை அலுவலக கட்டிடத்தையும் இழக்கும் நிலையில் உள்ளது. டெல்லியில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த காங்கிரஸ் அலுவலகத்தை உடனடியாக காலி செய்யுமாறு மத்திய அரசு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது காங்கிரஸ் கட்சி டெல்லியில் உள்ள அக்பர் ரோடில் 24ஆம் எண் உள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை உடனடியாக காலி செய்யுமாறு மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, இன்னும் சில காலம் அந்த இடத்தில் இருந்து தலைமை அலுவலகத்தை மாற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளதாக டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.