லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான அந்தஸ்து காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று சபாநாயகரிடம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவ பதவிக்காக காய் நகர்த்தி வரும் காங்கிரஸுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எந்த கட்சியும் அந்தஸ்து பெறாததால், இதுகுறித்து ஆலோசனை வழங்குமாறும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்களை லோக்சபா தலைவர் சுமித்ரா மஹாஜன் சமீபத்தில் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி,
543 எம்.பிக்கள் கொண்ட லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான 10 சதவீத உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி பெறவில்லை. எனவே அந்தப் பதவியைப் பெறும் அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துவிட்டது. இதுவரை எதிர்க்கட்சி அந்தஸ்து பெறாத கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டதில்லை. 1984 ஆம் ஆண்டில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தும் 55 எம்.பிக்கள் இல்லை என்ற காரணத்தால் தெலுங்கு தேச கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்க மறுக்கப்பட்டது. எனவே காங்கிரஸூக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கத் தேவையில்லை என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காவிட்டால் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர். அட்டர்னி ஜெனரலின் கருத்து சோனியா காந்திக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது..