காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்துறை அமைச்சர் ப.சிதம்பரம். பாஜக தாக்கு
மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 10 வருடங்களாக அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அந்த ஆட்சிக்காலத்தில் ஊழல்துறை அமைச்சராக இருந்ததாக பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் சர்மா புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் சற்று முன் பேசியபோது, “மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் இடத்தில் தான் இருந்திருந்தால், ராஜிநாமா செய்திருப்பேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுபோன்ற வார்த்தைகளை அவர் கூறுவது அபத்தமானது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அவர் அமைக்கவில்லை. 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல்கள் உள்ளிட்ட முறைகேடுகள் சிதம்பரத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றன.
நிலக்கரிச் சுரங்க ஊழல் நடைபெற்றபோது எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று சிதம்பரம் அதை ஆதரித்தார். முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராக செயல்படாமல், ஊழல் துறை அமைச்சராகவே பலமுறை செயல்பட்டார். எனவே, ஜேட்லியை ராஜிநாமா செய்யுமாறு வலியுறுத்த, சிதம்பரத்துக்கு தார்மீக உரிமையில்லை என்று கூறினார்.