முதல்வர் உள்பட 43 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல். அருணாசல பிரதேசத்தில் பரபரப்பு
காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி அடைந்திருந்த அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்பட 43 எம்.எல்.ஏக்கள் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி இன்னொரு மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. சமீபத்தில் முன்னாள் முதல்வர் நபம் துகிக்கு எதிராக கலிகோ புல் தலைமையிலான காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி பாஜக ஆதரவுடன் அவர்கள் ஆட்சி அமைத்தனர். ஆனால் இந்த ஆட்சி ஆறு மாதங்கள் மட்டுமே நிலைத்தது. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்த அரசை அதிரடியாக அகற்றியதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை கலிகோ புல் ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக பெமா காண்டு பொறுப்பேற்றார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலிகோ புல், திடீரெஅன மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் அந்த மாநில அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவால் நபம் துகியைத் தவிர மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவருமே அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரெஅன முதல்வர் பெமா காண்டு தலைமையில் அருணாசல் மக்கள் கட்சி என்ற புதிய கட்சி உருவெடுத்துள்ளது. இக்கட்சியின் தலைமையில்தான் அருணாச்சல பிரதேசத்தில் இனி ஆட்சி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.