கட்சியில் நிதி நெருக்கடி. ஒருமாத சம்பளத்தை எம்.பிக்கள் தரவேண்டும் என காங்கிரஸ் உத்தரவு

கட்சியில் நிதி நெருக்கடி. ஒருமாத சம்பளத்தை எம்.பிக்கள் தரவேண்டும் என காங்கிரஸ் உத்தரவு
congress
இந்தியாவிலேயே பணக்கார கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்ற பெயர் உண்டு. அந்த கட்சிக்கு அசையும் சொத்துக்களும், அசையா சொத்துக்களும் பலகோடிக்கும் இருக்கும் நிலையில், கட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் தங்கள் ஒருமாத சம்பளத்தை கட்சி நிதியாக கொடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா,  காங்கிரஸ் கட்சியின் 44 மக்களவை  எம்.பி.க்களுக்கும் 68 மாநிலங்களவை எம்.பிக்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்குள் எம்.பிக்கள் தலா ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது

அதோடு முன்னாள் எம்.பி.க்களும் கட்சிக்கு நன்கொடை அளிக்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சி எம்.பிக்களிடம் நன்கொடை வசூலிக்கும் பொறுப்பு  டெல்லி மாநில பொறுப்பாளர் பி.சி. சாக்கோ, டெல்லி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் மக்கான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளிக்க மறுத்துள்ளதால் கட்சிக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்ததாகவும், மாநிலங்களுக்கு ஏராளமான நிதி பிரித்தளிக்கப்பட்டதாலும் அந்த கட்சி  நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், கட்சி வளர்ச்சி நிதிக்காக கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 250 தர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இதில் 75 சதவீதம் மத்திய தலைமைக்கும், 25 சதவீதம் மாநிலத்துக்கும் பிரித்தளிக்கப்படும் என்று அந்த கட்சியின்  பொருளாளர் மோதிலால் வோரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply