பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 180 நாட்கள் ஆகியதை தொடர்ந்து அந்த கட்சி என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தது, அதில் எத்தனை வாக்குறுதிகளுக்கு பல்டி அடித்து பின்வாங்கி உள்ளது என்பது குறித்து ‘180 நாள் ஆட்சியில் 25 பல்டிகள்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான்,” மோடி அரசு 180 நாட்களில் 25 யு டேர்ன் (பல்டி) அடித்து சாதனை புரிந்துள்ளது. இந்த பல்டிளை மக்களுக்கு தெரியபடுத்தவே இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மக்களுக்கு போலியாக பெரிய பெரிய வாக்குறுதிகளை அளித்து விட்டு பின்னர் அந்த வாக்குறுதிகளை கண்டுகொள்ளாமல் பல்டி அடித்து வருகின்றனர். இந்த புத்தகம் இந்த பல்டிகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
காங்கிரஸ் ஆட்சியின் போது வங்காளதேசத்தினர் வருகை அதிகமாக இருப்பது குறித்து எதிர்ப்பு அதிகமாக இருந்தது. இந்த பிரச்சனையை பதவிக்கு வந்த ஒரே மாதத்தில் முடிப்போம் என்று மோடி வாக்குறுதியளித்தார். வங்காள தேசத்தினர் வருகையை பா.ஜனதா அரசியல் லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டது.
அது போல் கருப்பு பண விவகாரத்தில் தேர்தலுக்கு முன் சுவிஸ் வங்கியில் இருந்து கருப்புபணத்தை கொண்டு வருவோம் என்றார்கள். நாம் எல்லாம் காத்து கொண்டு இருக்கிறோம்.
பிரதமர் மோடி சீனா தலைவர் ஜி ஜின்பிங்குடன் பேசி கொண்டு இருக்கிறார். அப்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவுகிறது. பிரிவு 370 குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகிறது.
நாகலாந்துக்கு கடந்த 10 வருடங்களாக காங்கிரஸ் பிரதமர்கள் யாரும் செல்லவில்லை என கூறினார் ஆனால் 2010 பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி மன்மோகன் சிங் அங்கு சென்று உள்ளார்” என்றார்.