நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற ஒரு வருடத்தில் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்த நிலையில் விரைவில் அவர் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமரின் இஸ்ரேல் பயணத்தை முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. பாலஸ்தீனத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாட்டை வலுவிழக்க செய்யும் என்பதால், இஸ்ரேலுக்கு மோடி பயணம் மேற்கொள்ள இருப்பது கவலைக்குரியதாகும்’ என்று அக்கட்சி நேற்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா,நேறு ஐதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு காலங்களில் இருந்தே, பாலஸ்தீனர்களின் உரிமைகள் தொடர்பாக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. நாட்டின் வெளியுறவு கொள்கை, பாகுபாடு கொண்டதாக இருக்கக் கூடாது. மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகளுடனான தொடர்புகளில் ஆர்வம் காட்டாததன் மூலம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் சமநிலைத் தன்மையை பிரதமர் மோடி வலுவிழக்க செய்திருக்கிறார். பாலஸ்தீனத்தின் மீதான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர் நீர்த்து போக செய்திருக்கிறார்.
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் மத்திய அரசின் முடிவு தன்னிச்சையானதாகும். அரசின் இந்த முடிவில் வெளிப்படைத் தன்மை இல்லை. இதுதொடர்பான விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ரஃபேல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். எங்கள் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் செயல்பாடுகள், பரிதாபகரமாக உள்ளன. எந்த விவகாரங்களில் அமைதி காக்க வேண்டுமோ, அவை குறித்துதான் அவர் கருத்து தெரிவிக்கிறார் என்று ஆனந்த் சர்மா கூறினார்.