திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்பு உள்ளது. டி.கே.ரங்கராஜன்
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தற்போது உருவாகியுள்ள கூட்டணி தேர்தல் வரை உறுதியாக இருக்கும் என்பதை கூற முடியாது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை வந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்பு உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார். எத்தனை முனை போட்டி என்பது போகப்போகத்தான் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முழு விபரங்கள்
சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளைத் தவிர்த்துவிட்டு, பிற கட்சிகள் ஓர் அணியாகவும், தனியாகவும் போட்டியிடுகின்றன. இதற்கு காரணம் சமூகத்திலும், அரசியலிலும் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள்தாம். ஒவ்வொரு மனிதனையும் பொருளாதாரம் பாதிக்கிறது.
பொதுமக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்னையையும் கண்டுகொள்வதில்லை. அதிமுக, திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே, மக்கள் நலக் கூட்டணி உருவானது. மாற்றத்தை மக்கள் விரும்புவதால், அதற்கேற்ப தேர்தல் களமும் உருவாகி உள்ளது. தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு வர வேண்டும் என்பதுதான் இப்போதும் எங்கள் விருப்பம். ஆனால், எப்படிப்பட்ட தேர்தல் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.
பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் வரை இருக்காது என்று கூறுகின்றன. அவர்கள் ஆசை நிராசையாகத்தான் போகும்.
இந்தத் தேர்தலில் எத்தனை முனை போட்டி ஏற்படும் என்பதை இப்போது கூற முடியாது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக நிற்கலாம். அதிமுகவுடன் பேசிக் கொண்டிருக்கும் கட்சிகள் கூட வேறு அணியில் சேர்ந்தோ அல்லது தனியாகவோ போட்டியிடலாம்’ என்று கூறினார்.