திமுக கூட்டணி கட்சிகளும் தினகரனுக்கு ஆதரவா?
சென்னை ஆர்,.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது கூட மற்ற அரசியல் கட்சிகளை உறுத்தவில்லை. அவர் ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றதுதான் பலரது கண்களை உறுத்துகின்றது. பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 50% வாக்குகளை தினகரன் பெற்றூள்ளார்.
இந்த நிலையில் தினகரனை நோக்கி அதிமுகவினர் மட்டும் வரவில்லை. மற்ற கட்சியினர்களும் தினகரனுக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆளும் கட்சியையும் மத்திய அரசையும் எதிர்க்க திமுகவால் முடியவில்லை என்பது இந்த தேர்தல் முடிவு காட்டியிருப்பதால் அரசியல் கட்சிகள் தினகரன் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு என்பதை தினகரன் நிரூபித்துள்ளார் என்று திருமாவளவன் கூறியிருப்பதையும், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவின் தலைமை, தினகரன் தான் என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு காட்டுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருப்பதையும் பார்க்கும்போது பல ஊகங்கள் கிடைக்கின்றன.