குடிசையில் பிறந்து ஐ.ஏ.எஸ் என்ற கோபுரத்தை அடைந்த சாதனை தமிழர்
குடிசையில் வளரும் ஒரு மாணவன் பள்ளி இறுதி வகுப்பை முடிக்கவே பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும்போது நெய்வேலியில் குடிசையில் பிறந்து வளர்ந்த ஒருவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார். நெய்வேலி சுரங்கத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக பணியைவிட்டு விலகிய ஆறுமுகம் என்பவரின் மகன் மணிகண்டன், தாய் செய்த கூலிவேலையால் கிடைத்த பணத்தின் மூலம் பள்ளி இறுதிப்படிப்பை முடித்தார். பின்னர்தனது சொந்த முயற்சியால் ஐ.ஏ.எஸ் படித்தது குறித்து அவர் கூறியதாவது:
ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது தான் எனது கனவு. அந்த கனவு நிறைவேறுவதற்கு நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன். என்னுடைய பெற்றோர் படிக்காதவர்கள் என்பதால் அவர்கள் கூலி தொழிலாளிகளாக தான் வாழ்க்கையை தொடங்கினார்கள். அப்பா, ஆறுமுகம் நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக இருந்தார். உடல்நலக்குறைவால் அந்த பணியில் அவரால் நீடிக்க முடியவில்லை. அம்மா வள்ளி தான் வீட்டு வேலைக்கு சென்றும், வயலில் கூலி வேலை பார்த்தும் என்னை படிக்க வைத்தார். தங்கை சத்யா 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.
பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவுடன் சேர்ந்து நானும் கூலி வேலைக்கு செல்வேன். அதில் கிடைத்த வருமானத்தை குடும்ப செலவுக்கும், என் படிப்பு செலவுக்கும் பயன்படுத்திக் கொண்டேன். கோவையில் பி.பார்ம் படித்தேன். பின்னர் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்.பார்ம் படித்து முடித்தேன்.
குடும்பத்தின் வறுமையிலும், படிப்பை இடையில் நிறுத்திவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் என் படிப்பில் தான் என் குடும்பத்தின் எதிர்காலமும், என்னுடைய கனவும் இருக்கிறது என்பதை நான் நன்றாகவே உணர்ந்து இருந்தேன்.
2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வை தமிழிலேயே எதிர் கொண்டு வெற்றி பெற்றேன். அதனைத் தொடர்ந்து மெயின் தேர்வையும், நேர்முக தேர்வையும் தமிழிலேயே சந்தித்தேன். 332-வது ரேங்கில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன். தமிழில் தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவன் நான் தான் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திலேயே எனக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டால் அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் எனது பயணத்தை தொடங்க இருக்கிறேன்
இவ்வாறு மணிகண்டன் தனது சாதனை பயணம் குறித்து கூறியுள்ளார்.