திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் திடீரென தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அறிவித்ததால் அ.தி.முக வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பாரதிய ஜனதாவின் தமிழக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் புவனேஸ்வரியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெள்ளையம்மாள்ளும் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்கள் இருவரை தவிர இன்னும் 8 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இருவர் மட்டுமே களத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், நெல்லை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான லட்சுமியை திடீரென சந்தித்து தனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கூறி கையோடு தான் எடுத்து வந்திருந்த எழுத்துபூர்வமான மனுவை அவரிடம் கொடுத்தார். இவருடைய விலகலால் அ.தி.மு.க வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
வெள்ளையம்மாளின் இந்த திடீர் பல்டிக்கு நெல்லை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேட்பாளர் வெள்ளையம்மாளின் பணத்திற்கு விலைபோனதே விலகலுக்கு காரணம் என பாரதிய ஜனதா கட்சியின் வட்டாரம் கூறுகிறது. மேலும், முதல்வரை சந்தித்து வெள்ளையம்மான் அ.தி.மு.க.வில் சேரப்போவதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.