இருமல் மருந்துகள்

7c0d2df6-4225-43a5-bc43-4b88ce45dce4_S_secvpf

சுவாசப் பாதையில் ஏற்படும் இருமலை, சளி வராத வறட்டு இருமல் (Dry cough), சளியுடன் கூடிய இருமல் (Productive cough) மற்றும் ஆஸ்துமாவினால் காற்றுப் பாதை சுருங்குவதால் ஏற்படும் இருமல் (Allergy, Bronchodilator cough) என அதனதன் காரணங்களில் இருந்தே இருமல் மருந்துகளை, மருத்துவர் ஸ்டெதஸ்கோப் மூலமாக கேட்டு உறுதிபடுத்தியபின் எழுதித் தருவார்.

எதனால் இருமல், என்ன இருமல் என்று தெரியாமல் மருந்துக்கடைக்காரர் கொடுக்கும் இருமல் மருந்து பாட்டிலை உபயோகப்படுத்துவதால் இருமல் குறையாது. மருத்துவரிடம் செல்வதைத் தள்ளிப்போடுவதால் நோயும் உபாதையும் அதிகமாகும். அதோடு, விலை கூடிய தேவையற்ற இருமல் மருந்துக்கும் செலவு தனி. இருமலானது சுவாசக் குழாயின் எந்த இடத்தில் உருவாகிறதோ, அதைப் பொறுத்து மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், மிகுந்த சளியுடன் அல்லது சளி இல்லாமல் நுரையீரலிலிருந்து என இருமல் சத்தமே மருத்துவருக்கு நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைக் காட்டிக் கொடுத்துவிடும்.

புகை பிடிப்பவர்களின் இருமல்… காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக இருமுவதை வீட்டினரே கண்டுபிடிக்க முடியும். மேலோட்டமாக கிருமிகள் இருக்கும்பட்சத்தில் அவ்வப்போது என ஆரம்பிக்கும் இருமல் ஒரே இடத்தில் ஆழமாக பரவும்போதோ, மூக்கிலிருந்து தொண்டை அல்லது சுவாசப்பாதை என பரவும்போதோ தொடர்ச்சியாக மூச்சுவிடக் கஷ்டப்படுத்தும் அளவுக்கு இருமலாக மாறும். இரவில் படுப்பதற்கு முன்பு, காற்றுப் பாதைகளை சுருங்கச் செய்யும் நெடிகளான நறுமண ஸ்பிரே, வாசனைத் திரவியங்கள், வீடுகளில் உபயோகப்படுத்தும் நெடியுடன் கூடிய சுத்தம் செய்யும் நவீன கெமிக்கல்ஸ் ஆகியவற்றுக்கும் ஆஸ்துமா போன்ற இருமல் வரலாம்.

கிருமிகளால் வரும் இருமலுக்கு சரியான நேரத்தில் சரியான கிருமி நாசினிகளை மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் எடுத்துக்கொண்டாலே இருமல் மருந்துகள் தேவையில்லாமல் போய்விடும்.

1. அலர்ஜியினால் வரும் சளி இல்லாத (Dry cough) வறட்டு இருமலுக்கு கொடுக்கும் மருந்துகள் இருமலுக்கு காரணமான இடங்களை இருமல் காரணிகளிலிருந்து மட்டுப்படுத்துவதால் இருமலைக் குறைக்கும். 

2. சளி பிடித்த பிறகு தாமதமாக சிகிச்சை செய்வதால் சளி இன்னும் அதிகமாகி காற்றுப்பாதையை அடைக்கும் அளவுக்கு அதிகமாகும். ஒவ்வொரு இருமலுக்கும் கட்டி கட்டியாக சளி வெளியேறும் இருமலுக்கு என சளியையும் குறைத்து, இருமலையும் குறைக்கும் மருந்துகள் உள்ளன.

3. சில இருமல் மருந்துகள் மூளையில் இருமலை கட்டுப்படுத்தும் மையங்களை செயல் இழக்கச் செய்வதன் மூலம் ஆக்ரோஷமான இருமலைக் கட்டுப்படுத்தி நோயாளியை தூங்கச் செய்வதற்கும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் காயங்களை காப்பாற்றவும், இதய நோய் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் ரணங்களை ஆற்றவும் பயன்படுத்தப்படுகின்றன.

4. ஆஸ்துமா இருமலில் நுரையீரல், காற்றுப்பாதை சுருங்குவதும், நீர் கோர்ப்பதும், காற்றுப் பாதையின் உள்சுவர்கள் வீங்குவதும்தான் மூச்சுத்திணறலுக்கு காரணமாகின்றன. ஆகவே இதற்கான Bronchodilator எனப்படும் மூச்சுக் குழாயை விரிக்கும், அலர்ஜியையும் சளியையும் குறைக்கும் மருந்துகள் அடங்கிய இருமல் மருந்துகளே ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தீர்வு தரும். இருமல் மருந்துகளை கடைகளில் வாங்கி எடுத்துக் கொள்வதன் மூலம் சுவாசக்குழாய் நோய்களை காய்ச்சலாக்கி கஞ்சி குடிக்க வைக்கும். அவை நோய்களை குணமாக்குவதற்கு பதில் மோசமாக்கி மருத்துவரை நாடும் காலத்தை தாமதமாக்க மட்டுமே பயன்படும்.

Leave a Reply