ஆசிரியர் கல்வியியல் (பி.எட்., எம்.எட்.) படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை செப்டம்பர் நான்காவது வாரத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப விநியோகத்தை செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்க முடிவு செய்திருப்பதாகவும் உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல், படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் தமிழகத்தில் 2015-16 கல்வியாண்டு பி.எட்., எம்.எட். மாணவர் சேர்க்கை தொடர்ந்து தாமதமாகி வந்தது.
வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் பி.எட். படிப்புக் காலம் 2015-16 கல்வியாண்டில் ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் எழுந்தது.
இந்த நிலையில், இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்தவும், அதற்கான விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கவும் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து விண்ணப்ப விநியோகத்துக்கான ஏற்பாடுகளை அந்தக் கல்லூரி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
ஆசிரியர் கல்வியியல் படிப்புகளான (பி.எட்., எம்.எட்.) மாணவர் சேர்க்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் செய்து முடித்து, கலந்தாய்வு நடத்தத் தயார் நிலையில் உள்ளது.
கலந்தாய்வுக்காக 8 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் விண்ணப்பங்களை உடனடியாக அச்சிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை செப்டம்பர் 4 ஆவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்ப விநியோகம் செப்டம்பர் முதல் வாரத்தில், அதாவது செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு கல்லூரி இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் ஓரிரு நாள்களில் வெளியாகும். படிப்பு காலம் ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்பதை அரசு விரைவில் தீர்மானித்து அறிவிப்பு வெளியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.