அ.தி.மு.க. ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது. மு.க.ஸ்டாலின்
தமிழககத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தற்போது முதலே பிரச்சாரங்களை துவக்கிவிட்டன. இந்நிலையில் திமுக சார்பில் “நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்” என்ற தலைப்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை நேரில் சந்திக்கும் பயணம் ஒன்றை நேற்று கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆரல்வாய்மொழியில் நேற்று அவர் பேசும்போது, ”தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பயணம் தொடங்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. அரசு மக்கள் பணியாற்றவில்லை. இந்த ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. வாக்காளர் பட்டியலில் அ.தி.மு.க.வினர் குளறுபடிகள் செய்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்படாமல் அறிவிப்பாகவே உள்ளது. வருகின்ற 2016ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். அ.தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதால், ஆட்சியாளர்களை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இது தொடக்கப்புள்ளியாக அமையும். மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். அதனால், அ.தி.மு.க. ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது.
மேலும், நமக்கு நாமே பயணத்தை இன்று துவங்கி வைத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் செல்லும் எல்.இ.டி. வாகனப் பிரச்சாரமும் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் பட்டியலிட்டு எடுத்துக் கூற வேண்டும். மாற்றத்திற்கான செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் இந்த முக்கியமான பயணத்தில் தி.மு.க.வினர் அனைவரும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.
ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து மு.க.ஸ்டாலின் பின்னர் நாகர்கோவிலுக்குச் சென்றார். அங்கு மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் 2 ஆம் நாள் பயணத்தை இன்று காலை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். திருவள்ளுவர் சிலை அருகே மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் நடைபாதை வியாபாரிகளையும் அவர் சந்தித்து பேசினார்