மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அக்டோபர் 7ஆம் தேதி ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் காங்கிரஸார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலின்போது, கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, ”மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரே என்று ஆவேசமாக பேசினார். இந்த பேச்சினால் அதிர்ச்சி அடைந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ராகுல்காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம், பிவாண்டி நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குண்டே என்பவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் ராகுல்காந்தி நேற்று ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் மாதம் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.