மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் இந்துத்துவா அதிகரித்து வருவதாக பெரும்பாலான அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒருசில கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.
நேற்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பயாசி ஜோஷி என்பவர் ‘அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் முடிவு குறித்து பின்வாங்க போவதில்லை என்றும், ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்றும் நாகபுரியில் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ராமர் கோவில் வழக்கை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பசுவதை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் ராஜஸ்தான் உள்பட ஒருசில மாநிலங்களிலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வர பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் கர்நாடக மாநில ஆளுனர் வஜுபாய் வாலா நேற்று கூறியபோது இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.