பரபரப்பான பெங்களூர் சாலையில் படுத்திருந்த முதலை. அலறியடித்து மக்கள் ஓட்டம்.

bengaluru crocadile 1இந்திய சாலைகளில் இதுவரை ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகள்தான் படுத்திருப்பதை பார்த்திருக்கின்றோம். ஆனால் பெங்களூர்வாசிகள் பரபரப்பாக இயங்கும் ஒரு சாலையின் நடுவில் மிகப்பெரிய முதலை ஒன்று படுத்திருந்ததை பார்த்து திடுக்கிட்டுள்ளனர்.

பெங்களூருவின் பரபரப்பான சாலையில் திடீரென  முதலையை வைத்து நடந்த வித்தியாசமான போரட்டத்தால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் ஐடி தலைநகர் என்று கூறப்படும் பெங்களூர் நகரில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. சிறிய மழை பெய்தாலே சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் கடும் அவஸ்தைக்கு உள்ளாக்குகிறது.

இந்நிலையில் வடக்கு பெங்களூருவில் உள்ள சுல்தான் பாலையா பிரதான சாலையில் சுமார் 12 அடி நீளத்தில் குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை சரி செய்யக் கோரி பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் பலன் இல்லை.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என யோசித்த பாதல் நஞ்சுண்ட சாமி என்ற ஓவிய கலைஞர், ரூ.6000 செலவு செய்து 20 கிலோ எடையுள்ள நீளமான செயற்கை முதலை பொம்மை ஒன்றை  வாங்கி, அதனை அந்த குண்டும் குழியுமான சாலையின் நடுவில் வைத்தார். பின்னர் அந்த சாலை குழியை பச்சை வண்ணத்தில் வர்ணம் பூசி, குளம்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.

உண்மையில் உயிரோடு இருக்கும் முதலை போல அது இருந்ததால், அந்த வழியாக வந்த வாகனங்களில் வந்த பொதுமக்கள் முதலில் இலேசாக பயந்து ஓட்டம் பிடித்தனர்.  பின்னர் அருகில் சென்று பார்த்து, பாதல் நஞ்சுண்ட சாமியை நோக்கம் என்ன என்பதை தெரிந்துகொண்டு, அவரை வெகுவாக பாராட்டிவிட்டு சென்றனர்.

இதுகுறித்த தகவல் ஊடகங்களிலும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் படங்கள் மற்றும் வீடியோவுடன் வெளியானதை தொடர்ந்து, இப்பிரச்னை உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுப்பார்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றனர் பெங்களூருவாசிகள்!

Leave a Reply