கூட்டத்தில் நண்பர்களை தேட உதவும் எளிமையான ஆப்ஸ்!

crowdinsty_1

இதோ இன்னொரு முட்டாள்தனமான செயலி( ஆப்ஸ்), ஆனால் இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள் – இப்படிதான் ஸ்மார்ட்போன் உலகிற்கான புதிய செயலியான லுக்பாரை (LookFor) அதனை உருவாக்கியுள்ள லோகன் ரைலே அறிமுகம் செய்கிறார்.

எல்லாமே ஸ்மார்ட் அடைமொழியுடன் அறிமுகமாகி கொண்டிருக்கும் உலகில், ஸ்மார்ட்போன்களின் உலகில் மட்டும் முட்டாள்தனம் எனும் வர்ணனை மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. பல வடிவமைப்பாளர்கள், புத்திசாலித்தனமானது என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளாமல், இது கொஞ்சம் மடத்தனமான செயலி என்று சற்றே கூலாக தங்கள் புதிய செயலிகளை முன் வைக்கின்றனர்.

அதாவது, எங்கள் செயலி அதை செய்யும், இதை செய்யும் என்றெல்லாம் ஓவராக பேசாமல், கொஞ்சம் விளையாட்டுத்தனமாக முட்டாள் செயலிகளாக இவை அறிமுகம் செய்யப்பட்டாலும் இவை முற்றிலும் பயனில்லாதவை என்று சொல்லிவிட முடியாது. இந்த செயலிகளும் நிச்சயம் பயனுள்ளவைதான்; ஆனால் அந்த பயன்பாடு குறிப்பிட்ட நோக்கம் மற்றும் வரம்பு சார்ந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த செயலிகள் நிச்சயம் முதல் பார்வையில் உங்களை கவர்ந்திழுத்து, குறைந்தபட்சம் அட போட வைக்கும். சமீபத்திய அறிமுகமான லுக் பார் இதற்கு அழகான உதாரணம்.

உலகின் மடத்தனமான இந்த செயலி, எந்த கூட்டத்திலும் உங்கள் நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது. எப்படி?

இந்த செயலியை பயன்படுத்த தீர்மானித்து அதை டவுன்லோடு செய்து கொண்டால், அதில் தேர்வு செய்ய அதிக அம்சங்கள் கிடையாது.அதில் இருப்பதெல்லாம் வண்ணங்கள்தான். அந்த வண்ணத்தில் ஒன்றை தேர்வு செய்து கொண்டால், உங்கள் போன் திரை அந்த வண்ணத்தில் பளிச் என கண் சிமிட்டும். அவ்வளவுதான் இந்த செயலி!

இதனால் என்ன பயன்? கூட்டமான இடங்களில் உங்கள் நண்பர்களை தேட இதை பயன்படுத்தலாம். அதாவது, பலர் கூடியுள்ள இடங்களில் இந்த செயலியை கிளிக் செய்து போனை கையுயர்த்தி காட்டினால், கூட்டத்தில் எங்கோ இருக்கும் நண்பர்களுக்கு, இதோ நானிருக்கிறேன் என வண்ண போன் சிமிட்டல் மூலம் உணர்த்தலாம்.

இதெல்லாம் ஒரு செயலியா என கேட்கத்தோன்றுகிறதா? உண்மைதான் என இதன் உரிமையாளர் ரைலேவும் ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், கூட்டம் நிறைந்த இசை கச்சேரிகளிலோ, திரையரங்களிலோ உங்களை நண்பர்களுக்கு உணர்த்த இது கைகொடுக்கும் என்று நம்புகிறார்.

தேவைப்பட்டால் நண்பர்களுக்கு இந்த செயலி பற்றி குறுஞ்செய்தி அனுப்பி, அதில் வண்ணத்தையும் குறிப்பிட்டு பின்னர் போனை உயர்த்தி காட்டலாம் என்கிறார்.

கூட்டம் நிறைந்த இடங்களில் நண்பர்களை தேட இது நிச்சயம் பயன்படும் என்று ரைலே உறுதியுடன் சொல்கிறார். ஏனெனில் அவருக்கு இப்படி ஒரு தேவை ஏற்பட்டதால்தான் இந்த செயலியை உருவாக்கும் எண்ணமே உண்டானதாம்.

இசை விழா ஒன்றில் பங்கேற்றபோது, அந்த கூட்டத்தில் நண்பர்கள் இருக்கின்றனரா? என தேடிப்பார்க்க ஒரு எளிய வழி தேவை என உணர்ந்த போது , இப்படி போனை உயர்த்தி காட்டி உணர்த்தலாம் என தோன்றியதாக ரைலே கூறியுள்ளார்.

அதன் பிறகு இந்த எண்ணத்துடன், இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டரில் இரு பக்கத்தை அமைத்து, ஆதரவு திரட்டி இப்போது ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டிற்காக லுக் பார் செயலியை அறிமுகம் செய்துள்ளார்- மிகவும் புத்திசாலித்தனமாக முட்டாள் செயலி எனும் வர்ணனையுடன்!.

லுக் பார் செயலி:https://play.google.com/store/apps/details?id=lookfor.retroproof.net.lookfor

Leave a Reply