கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும். சர்வதேச எரிசக்தி நிறுவனம் தகவல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. மேலும் ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டு வருவதையடுத்து, ஈரான் நாடும் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தேவைக்கு அதிகமாக உற்பத்தி இருப்பதாலும் ஓவர்-சப்ளை காரணமாகவும், தேவைக்கு தகுந்தபடி கச்சா எண்ணெயின் உற்பத்தி கட்டுபடுத்த தவறியதாலும் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரலுக்கு 29 டாலருக்கும் குறைவாகவே வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய கமாடெட்டி சந்தையில் கச்சா எண்ணெய் யூனிட் ஒன்றுக்கு ரூ.2000க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.5000க்கு விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.