சி.எஸ்.ஐ.ஆர். “நெட்’ தேர்வு அறிவிப்பு

images (1)

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் நடத்தப்படும் “தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை இதுவரை பொறியியல் படித்தவர்களும் எழுதி வந்தனர். இந்த நிலையில், நடைபெற உள்ள டிசம்பர் மாத “நெட்’ தேர்விலிருந்து பொறியியல் அறிவியல் பாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறவும் ஆண்டுக்கு இரு முறை “நெட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

கலை, அறிவியல் துறைகளில் உள்ள 79 வகையான பாடங்களுக்கான இந்தத் தேர்வை 2014 ஜூன் மாதம் வரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்தது. பின்னர் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) ஏற்று நடத்தி வருகிறது.

இதுபோல, வேதியியல் அறிவியல் (கெமிக்கல் சயின்ஸ்), புவியியல், சுற்றுச்சூழல், கடல்சார் அறிவியல்- விண்வெளி அறிவியல், வாழ்வியல் அறிவியல், கணித அறிவியல், இயற்பியல் அறிவியல், பொறியியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான “நெட்’ தகுதித் தேர்வை சி.எஸ்.ஐ.ஆர். தனியாக நடத்தி வருகிறது.
 இந்த இரண்டு அமைப்புகள் சார்பில் தனித் தனியாக நடத்தப்படும் இந்தத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும்.
 முதலில் சி.எஸ்.ஐ.ஆர். சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும். பின்னர் சி.பி.எஸ்.இ. சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும்.

வருகிற டிசம்பர் மாதத்துக்கான தேர்வை சி.எஸ்.ஐ.ஆர். இப்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வை டிசம்பர் 20-ஆம் தேதி நடத்த உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.csirhrdg.res.in என்ற இணையதளம் வாயிலாக இணையவழியில் (ஆன்லைன்)மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 24 கடைசித் தேதியாகும். பொதுப் பிரிவினர் ரூ. 1,000, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ரூ. 500, எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ. 250 தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

பொறியியல் பாடங்கள் நீக்கம்: இந்தத் தேர்வை இதுவரை பொறியியல் படித்தவர்களும் எழுதலாம் என்ற நிலை இருந்து வந்தது. நடைபெற உள்ள டிசம்பர் மாதத் தேர்வில் பொறியியல் அறிவியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தத் தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.எஸ்.ஐ.ஆர். அதிகாரிகள் கூறுகையில், யுஜிசி அறிவுறுத்தலின்படி “நெட்’ தகுதி இவர்களுக்குத் தேவையில்லை என்ற அடிப்படையிலேயே பொறியியல் அறிவியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்றனர்.
 

Leave a Reply