நம் காலத்துச் செயலியாக ‘கியூப் ஃப்ரி’ அறிமுகமாகியிருக்கிறது. அதாவது அலுவலகம், வீடு தவிர பணியாற்றுவதற்குப் பொருத்தமான கச்சிதமான இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழி காட்டும் செயலியாக உருவாகியிருக்கிறது.
லேப்டாப் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றிக்கொள்ளலாம் என்னும் சுதந்திரத்தை நவீன தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கிறது. இதனால், ஓட்டல் வரவேற்பறை, பொது நூலகம், கஃபேக்கள் எனப் பல இடங்களில் இருந்து வேலைபார்க்க முடிகிறது. அலுவகலத்தில் இருந்து விடுபட்ட நவீன நடோடிகளும் சரி, அலுவலகத்திற்கு வெளியே பணி புரியும் தேவை உள்ளவர்களும் சரி, இத்தகைய பொதுவான பணியிடங்களை விரும்புகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டுகிறது கியூப் ஃப்ரி செயலி.
உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் எங்கெல்லாம் பொதுப் பணியிடங்கள் அல்லது பகிர்வுப் பணியிடங்கள் இருக்கின்றன என்பதை இந்தச் செயலி வரைபடம் மூலம் சுட்டிக்காட்டுகிறது. அந்த இடங்களின் தன்மை, அங்குள்ள வை-பை வசதியின் ஆற்றல் உள்ளிட்ட விவரங்களையும் தருகிறது. அது மட்டுமா ? அங்கே இருக்கும் சக நடோடி பணியாளர்கள் பற்றிய விவரங்களையும் அளித்து அவர்களுடன் தொடர்புகொள்ளவும் வழி செய்கிறது. இணைந்து பணியாற்றக்கூடிய தோழர்களையும் தேடலாம். கூட்டு முயற்சிப் பிரியர்களுக்கு பயன் தரக்கூடிய செயலி இது!
செயலியைப் பயன்படுத்த: http://cubefreeapp.com/