அந்தமான் அருகே கரையை கடந்த லெஹர்புயல் மீண்டும் வலுப்பெற்று மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இந்த புயல் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 570 கிலோமீட்டர் தூரத்திலும், காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கு திசையில் 510 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. அது மேற்கு வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த புயல் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும்.
அப்போது கடலோர ஆந்திர பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் மிக கன மழை பெய்யும். தெலுங்கானா பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.
ஆனால் தமிழ்நாட்டுக்கு இந்த புயலால் எந்த தாக்கமும் இல்லை. இலங்கை அருகே புயல் உருவானால் அல்லது நிலை கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் மாதம் முடிய உள்ளது. சில வருடங்களில் ஜனவரி 5-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடித்து இருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.