நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வது உள்பட பல முக்கிய முடிவுகளை எடுக்க தே.மு.தி.க கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று பொன்னேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விஜயகாந்த் தலைமையில் கூடியது.
இதில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு விஜயகாந்திற்கு வழங்கியது. கட்சியின் நலன் கருதி அவர் எடுக்கும் முடிவுக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து கண்டனத்தீர்மானம் உள்பட மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்தவுடன் தக்க நேரத்தில் தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து முடிவு செய்வார் என்று கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க ஜி.கே.வாசன் நேரில் விஜயகாந்தை சந்தித்து சென்றதாலும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்கள் புத்தாண்டு அன்று நேரில் சந்தித்து விஜயகாந்திற்கு வாழ்த்து கூறியதாலும், தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.