அமெரிக்க அதிபர் ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு. சீனா எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு. சீனா எதிர்ப்பு

12சீனாவின் எதிர்ப்பையும் மீறி பெளத்த மதத் துறவி தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா புதன்கிழமை சந்தித்தார்.

எனினும், திபெத் விவகாரம் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெளத்த மதத் துறவி தலாய் லாமாவை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் தலாய் லாமாவை சந்திக்கும் வாய்ப்பு அதிபருக்கு நான்காவது முறையாகக் கிடைத்துள்ளது.

சீனாவின் எதிர்ப்புக்கிடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தாலும், திபெத் விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திபெத் சீனாவின் ஒரு அங்கம் என்றே அமெரிக்கா எப்போதும் கூறி வருகிறது.

தலாய் லாமாவை அதிபர் சந்தித்ததன் மூலம், திபெத் விடுதலைப் போராட்டத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளிப்படுத்தவில்லை.

இந்தச் சந்திப்பின்போது, ஆர்லண்டோ நகர கேளிக்கை விடுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தலாய் லாமா தனது ஆழ்ந்த இரங்கலை அதிபரிடம் தெரிவித்தார்.

திபெத்தின் தனித்துவம் வாய்ந்த மதம், பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற தலாய் லாமாவின் நம்பிக்கையும், போதனைகளையும் அதிபர் ஒபாமா பாராட்டினார்.

தலாய் லாமா மீது அதிபர் ஒபாமாவுக்கு எப்போதும் அன்பும், அக்கறையும் உண்டு. அவர்களிடையேயான சந்திப்பு தனிப்பட்ட முறையிலானதே தவிர, அரசியல்ரீதியானது அல்ல.

அதனால்தான் அதிபர் ஒபாமா தனது ஓவல் அலுவலகத்தில் தலாய் லாமாவை சந்திக்காமல், வெள்ளை மாளிகை இல்லத்தில் சந்தித்தார் என்றார் எர்னஸ்ட்.

அமெரிக்கா வாக்கு தவறிவிட்டது

தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்தித்ததன் மூலம் அமெரிக்கா வாக்கு தவறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

திபெத் விவகாரம் சீனாவின் உள்நாட்டு விவகாரமாகும். இந்த விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமையில்லை.

தலாய் லாமாவை அதிபர் ஒபாமா “தனிப்பட்ட’ முறையில் சந்தித்ததாகக் கூறினாலும், அது திபெத் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்ற வாக்குறுதிûயை மீறிய செயலே ஆகும்.

அமெரிக்காவின் இதுபோன்ற செயல்கள் இரு நாடுகளின் நல்லுறவுக்கும், பரஸ்பர நம்பிக்கைக்கும் கேடு விளைவிக்கும் என்றார் அவர்.

Leave a Reply