புறா திருடிய தலித் சிறுவனை அடித்து கொன்ற போலீசார்? அரியானாவில் பதட்டம்
அரியானா மாநிலத்தில் புறா திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறுவன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஏராளமான தலித்துக்கள் நடத்திய போராட்டத்தால் அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நேற்று இரண்டு தலித் சிறுவர்-சிறுமி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் அதே மாநிலத்தில் தற்போது ஒரு தலித் சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் கோகனா என்ற பகுதியைச் சேர்ந்த தலித் சிறுவன் சிறுவன் கோவிந்த் தனது வீட்டுக்குள் புகுந்து புறா திருடியதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சாதியைச் சேர்ந்தவர்கள் இன்று போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், கோவிந்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை என்ற பெயரில் கடுமையாக அடித்துள்ளனர். இதை கண்ட கோவிந்தின் தாயார், தன் மகனை விட்டு விடும்படி போலீசாரிடம் கெஞ்சி உள்ளார். பின்னர் அங்கிருந்த போலீசார், ரூ.10 ஆயிரம் தந்தால் உன் மகனை விட்டு விடுவதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த தாயார் பல இடங்களில் அலைந்து திரிந்து ரூ.5 ஆயிரத்தை திரட்டி கொண்டு வந்து போலீசாரிடம் கொடுத்தபோது காவல் நிலையத்தில் இருந்து உன் மகன் தப்பி ஓடி விட்டான் என்று கூறியுள்ளனர். இரவு முழுவதும் சிறுவனின் தாயாரும் உறவினர்களும் தேடிய நிலையில் மறுநாள் காலை கோவிந்த் தன் வீட்டுக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கோவிந்த் உடலை மீட்ட அவனது உறவினர்கள், தேசிய நெடுஞ்சாலையில் உடலை வைத்து போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பணத்தையும் வாங்கிக் கொண்டு கோவிந்தை அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றஞ்சாட்டினார்கள்.
சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், சிறுவன் தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் பொய் சொன்னதாகவும், கடுமையாக தாக்கியதற்கு சாட்சியாக அவனது உடலில் காயங்கள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இது குறித்து தீவிர விசாரணை நடத்த அரியானா மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கோவிந்த் உறவினர்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் இயல்பு நிலைமை பாதிப்பு அடைந்துள்ளது.