“சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடிக் நியோரோபதி (Diabetic neuropathy) காரணமாக அழுத்தத்தைத் தாங்கக்கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். ஒவ்வொரு ஆறாவது சர்க்கரை நோயாளிக்கும் பாதப் புண் பிரச்சனை ஏற்படுகிறது.
இதனால் கால் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்சனை செல்கிறது. உலக அளவில் கால் துண்டிப்பு செய்வதற்கு, 85 சதவிகிதம் அளவுக்கு பாதங்களில் ஏற்படும் புண்ணே காரணமாக உள்ளது.
கால்களை தினசரி கவனித்தல்: வெட்டுக்காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், சிவந்துபோய் இருத்தல், வீக்கம், நகங்களில் பிரச்னை உள்ளதா என்பதை தினசரி கவனிக்க வேண்டும். கண்ணாடி உதவியுடனோ அல்லது அடுத்தவர் உதவியுடனோ அடிப்பாதங்களைப் பார்க்க வேண்டும். ஏதேனும் வித்தியாசமாக இருந்தால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
அன்றாடம் கால்களைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மிதமான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். கால்களை மென்மையான துணி அல்லது பஞ்சு வைத்து கழுவ வேண்டும். அழுத்தமாகத் துடைக்காமல் ஒற்றிஒற்றி ஈரத்தை எடுக்க வேண்டும்.
கால் விரல்களுக்கு இடையே ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெறும் காலுடன் நடக்கக் கூடாது. வீட்டில்கூட செருப்பு அணிந்து நடக்க வேண்டும். புகை பிடிக்கக் கூடாது. இதனால், கால்களில் ரத்த ஓட்டம் குறையும்.”