தர்பார்: திரைவிமர்சனம் தாறுமாறான ரஜினி படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் ரஜினியின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதே இந்த படத்தின் ஒருவரி விமர்சனம் ஆகும்.
மும்பை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்கும் ஆதித்யா அருணாச்சலம் அந்த பகுதியில் இருக்கும் போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் மகனை கைது செய்கிறார். தனது மகனை வில்லன் விடுதலை செய்ய முயற்சிக்க அவரை குற்றவாளி கூண்டில் ஏற்ற ரஜினி முயற்சிக்க இருவருக்கும் இடையில் நடக்கும் போர்தான் இந்த படத்தின் முதல் பாதி கதை. இதனால் இரு பக்கமும் ஏற்படும் இழப்புகள் மற்றும் சில டுவிஸ்டுகள், பழிவாங்குதல் ஆகியவை இந்த படத்தின் இரண்டாம் பாதி கதை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிடுக்கான போலீஸ் உடையில் கச்சிதமாக பொருந்துகிறார். அவருடைய மிரட்டலான கிண்டலடிக்கும் நையாண்டி வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். ஆரம்ப காட்சிகளில் அதிரடியாக அறிமுகமாகும் ரஜினிகாந்த், வில்லன் குரூப்பில் உள்ள ஆட்களை அனாயசமாக என்கவுண்டர் செய்வது அட்டகாசமாக உள்ளது. அதன் பின் அந்த என்கவுண்டருக்கு இருக்கும் பின்னணி ஆச்சரியப்பட வைக்கிறது
ரஜினி இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவித்து நடித்துள்ளது திரையில் தெரிகின்றது. ரஜினியை திரையில் மிகச்சிறப்பாக எப்படி காண்பிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஏஆர் முருகதாஸ் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்று சொல்லவேண்டும்
நயன்தாரா இந்த படத்திற்கு தேவையா? என்ற ஒரு வரியை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. நிவேதா தாமஸுக்கு மிகச்சிறந்த கேரக்டர். ரஜினியின் மகளாக மட்டுமின்றி பல உணர்ச்சிமயமான காட்சிகள் அவருக்கு உண்டு. நயன்தாராவை காதலிக்க ரஜினியை தூண்டுவது அதன்பின் ரஜினி தனக்காகவே வாழ்கிறார் என்பதை புரிந்து கொண்டு அவரிடம் பாசம் காட்டுவது, இறக்கும் தருவாயில் வில்லன் குறித்த ஒரு ரகசியத்தை கூறுவது என படத்தில் அவரது பங்கு மிகச் சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது
யோகி பாபு காமடி இந்த படத்தில் மிகச் சிறந்த அளவில் ஒர்க்அவுட் ஆகிறது. ரஜினியை கலாய்க்கும் பல காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லன் சுனில் ஷெட்டியின் கேரக்டர் படுமோசமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்றால் அது வில்லன் சுனில்ஷெட்டி கேரக்டர்தான். இரண்டாம் பாதியில் திரைக்கதை சோர்வாக அவரது கேரக்டர் ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏஆர் முருகதாஸின் திரைக்கதை ரஜினி மற்றும் வில்லன் மோதும் காட்சிகளில் புத்திசாலித்தனம் தெரிகிறது. இரண்டாம் பாதியில் நிவேதா ரஜினியின் எமோஷன் காட்சிகள் கொஞ்சம் மனதை தொட்டாலும் ஆக்ஷன் காட்சிகள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கிளைமாக்ஸ் ஏமாற்றமாக இருக்கிறது என்பதும் ஒரு மைனஸ் பாயிண்ட்
அனிருத்தின் இசையில் அட்டகாசமான பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அனைத்து பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது என்பதும் சிறப்பு. சந்தோஷ் சிவனின் கேமரா மிக அருமை மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படமாக இந்த தர்பார் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை