மதுரை தொழிலதிபர் ஜமால் முகமது அவர்களின் கொலை வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மகள் இந்திரா கைது செய்யப்பட்டார். அவருடன் பெரியசாமியின் சகலை பழனிவேலு, அவருடைய மனைவி உமாராணி ஆகியோர்களும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தொழிலதிபர் ஜமால் முகமது என்பவர் சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா மற்றும் உமாராணிக்கு, சொத்து ஒன்றை விற்பனை செய்வதற்காக பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தாகவும், அதில் ஏற்பட்ட பணப்பிரச்னை காரணமாக ஜமால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை தீவிர விசாரணையின் மூலம் உறுதி செய்த திருச்சி போலீஸார், இந்த வழக்கில் கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்திரா, உமாராணி, பழனிவேலு ஆகிய மூவர் மீதும், வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் திருச்சிக்கு கொண்டு செல்லும் வழியில் இந்திரா மற்றும் உமாராணி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐ.பெரியசாமியின் மகள் போலீஸ் வேனில் இருந்தபோது புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகை புகைப்படக்காரர்களை திமுகவினர் அடித்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் வேனை துணியால் மூடி மறைக்கவும் செய்தனர்.