நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் விரைவில் கைது. ராஜ்நாத்சிங் பேட்டி
மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தின் முக்கிய காரணகர்த்தாவான நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுடெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தாவூத் விரைவில் கைது செய்யப்படுவார். எந்தவித நிபந்தனையுமின்றி இந்தியாவுக்கு அவர் கொண்டு வரப்படுவார். அவர் ஒரு சர்வதேச பயங்கரவாதி ஆவார். அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச அமைப்புகளின் உதவி அவசியப்படுகிறது. தாவூத்துக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ளது.
இராக்-சிரியா நாடுகளில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பது குறித்தும், அவர்கள் இந்தியாவில் விரைவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்துவோம் என்று மிரட்டல் விடுத்திருப்பது குறித்து கருத்து கூறிய ராஜ்நாத் சிங், ‘ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஐஎஸ் அமைப்பை எதிர்க்கின்றனர். ஆகையால் அந்த அமைப்பால் இந்தியாவில் செல்வாக்கு பெற முடியாது. ஐஎஸ் அமைப்பை இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இதை அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன’ என்றார்
காங்கிரஸ் மீது தாக்கு: நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி இழந்து வருகிறது. வருங்காலத்தில் அக்கட்சி தனது அரசியல் செல்வாக்கு முழுவதையும் இழந்துவிடும். காங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை (மாற்றம்) செய்யப்பட வேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கை குறித்து கூறிய அவர், இது அக்கட்சியின் உள்விவகாரமாகும். எனினும், காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்’ என்று கூறினார்.