கலைஞர் டிவிக்கு முறைகேடாக ரூ.200 கோடி கைமாறிய வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க சி.பி.ஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எனவே அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
சட்டவிரோதமாக ரூ.200 கோடி பணப் பரிமாற்றம் செய்ததாக கலைஞர் டிவியின் பங்குதாரர்களான கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 10 பேர்கள் மீது குற்றம்சாட்டி மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி உள்பட 10 பேர் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் 10 பேர்களில் தயாளு அம்மாளை தவிர மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்திருந்தது. வயது முதிர்வின் காரணமாக தயாளு அம்மாளுக்கு மட்டும் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு மட்டும் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதே நேரத்தில் இந்த வழக்கில் இருந்து அவரை முழுமையாக விடுவிக்க முடியாது என்றும், வழக்கை அவர் சந்தித்தே ஆகவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக கைது நடவடிக்கையில் இருந்து தயாளு அம்மாள் மட்டும் தப்பியுள்ளார்.