மறதி நோயால் பாதிக்கப்பட்ட தயாளு அம்மாள் தேர்தலில் வாக்களித்தது எப்படி? சிபிஐ வழக்கறிஞர்

dayalu ammalகலைஞர் தொலைக்காட்சியின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் தயாளு அம்மாளின் மருத்துவர் நேற்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் மருத்துவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தயாளு அம்மாளுக்கு கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு நோய்களுக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு  சுவாசக்கோளாறு மற்றும் சிறுநீரகப் பிரச்னை தொடர்பான நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அல்சீமர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நிலையில் தற்போது வரை எந்த மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
 
அப்போது குறுக்கிட்ட, அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் கிரோவர், மறதி நோயால் பாதிக்கப்பட்ட தயாளு அம்மாள் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தயாளு அம்மாள் வாக்களித்தது எப்படி? என்று கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மருத்துவர் இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply