கலாநிதி மாறனின் சன் டிவிக்காக சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாக முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் வி.கவுதமன் உட்பட மூன்று பேர்களை கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை மேலும் தொடரும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தனது சென்னை வீட்டில் சட்டவிரோதமாக 300-க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இன்று சிபிஐ தனது அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 18 மாதங்களாக தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வி.யின் எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோர்களிடம் பலகட்டமாக விசாரணை செய்து வந்த சிபிஐ, இன்று அவர்கள் முவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்கள் மூவரும் சிபிஐ விசாரணைக்காக காவலில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை தயாநிதி மாறன் திமுக தலைவர் கருணாநிதியை அவசரமாக சந்தித்து பேசியுள்ளார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “”சிபிஐ, அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. சிபிஐ குற்றங்களை கண்டுபிடிக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர குற்றங்களை சுமத்தும் அமைப்பாக இருக்கக்கூடாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடமும் கடந்த 18 மாதங்களாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அவர்களும் விசாரணைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வந்தனர்.
ஆனால் அவர்களை கைது செய்ததோடு சிபிஐ என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளுமாறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். தமிழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவருக்கு ஆதரவாக செயல்படும் வகையில், அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐ அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சிபிஐக்கு கடிதம் எழுதப்படும்’ என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சிபிஐயின் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.