இங்கிலாந்து கடற்கரையில் ஒதுங்கிய இறந்த திமிங்கலங்கள். செல்பி எடுக்க குவியும் சுற்றுலாப்பயணிகள்
இங்கிலாந்து கடற்கரையில் பெரிய பெரிய திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. பார்க்கவே பிரமாண்டமாக இருக்கும் இந்த இறந்த திமிலங்களை பார்க்கவும், அதனுடன் செல்பி எடுக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து நாட்டின் வடபகுதியில் உள்ள கடற்கரையில் இதுவரை நான்கு திமிங்கலங்கள் மரணம் அடைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 30 டன் எடையுள்ள இந்த திமிங்கலங்கள் பார்ப்பதற்கே பிரமாண்டமாக உள்ளது.
இந்த திமிங்களை பார்க்க அப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். திமிங்கலத்தின் மீது எழுதுவது, திமிங்கலத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொள்வது என அந்த பகுதியே ஒரு சுற்றுலா பகுதியாக மாறிவிட்டது.
ஆனால் இந்த இறந்த உடல்களை அப்புறப்படுத்த அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இந்த திமிங்கலங்கள் அப்புறப்படுத்தப்படும் என தெரிகிறது.