புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம சகோதரிகள் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 சகோதரிகளை தற்கொலைக்கு தூண்டிய அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதியன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வந்த 5 சகோதரிகளை ஆசிரம நிர்வாகம் வலுக்கட்டாயமாக அங்கிருந்து போலீஸ் துணையுடன் வெளியேற்றியது. இதையடுத்து, 5 சகோதரிகளின் பெற்றோர் உள்பட அனைவரும் நேற்று கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மூன்று சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மூன்று சகோதரிகள் உயிரிழந்ததற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வரும் 20ஆம் தேதி புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு வணிகர்கள் சங்கம் ஆதரவு கொடுக்குமா? என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.