பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன் என்ன நடந்தது? ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட ரகசியம்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் நான் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து இருந்திருந்தால் ஒசாமா பின்லேடனை எப்போதோ உயிருடன் பிடித்து இருப்பேன் என சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சிவேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை போட்டுத் தள்ளியது சுலபமான காரியம் அல்ல என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்குள் அமெரிக்க சீல் படையினர் புகுந்து தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆலோசனை வழங்கிய சிறியகுழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன்.
அந்த நடவடிக்கை அத்தனை எளிதான ஒரு தேர்வாக அமையவில்லை. இதுபோன்ற முடிவுகள் வெகு எளிதாக எடுக்கப்படுவதும் இல்லை. நமக்கு கிடைத்த உளவுத்தகவல்கள் சரியானவைதானா? இல்லையா? என்பதிலும், அந்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதலை நடத்தலாமா? என்பதிலும் இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன. இதில் தெளிவான தேர்வு என்ற முடிவை எடுப்பதில் சிரமம் இருந்தது.
இத்தகையை நிலைப்பாடு சூழும் வேளைகளில்தான் நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவர் கருத்துகளின் அடிப்படையில் சிறந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது. பல கேள்விகளை எழுப்பி, கிடைக்கும் பதில்களை ஆய்வுசெய்து செயலாற்ற வேண்டியுள்ளது.
பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை தீர்த்துக் கட்டுவது தொடர்பாக எங்களது ஆலோசனை பலமணி நேரம் நீடித்தது. அதிபர் பராக் ஒபாமா ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்டார். இந்தப்பணி அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதால் எங்களுக்குள் சில கருத்துபேதம் இருந்தது. ஆனால், தாக்குதலை நடத்தலாம் என நான் ஆதரவு தெரிவித்தேன். இந்த நடவடிக்கையின் மூலம் நமது பலம் என்னவென்பதை நாமே அறிந்து கொள்ள வழிவகுக்கும் என தீர்மானித்தேன்.
இதையடுத்து, பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகருக்குள் நமது சீல் படையினர் நுழைந்தனர். எனது வாழ்க்கையின் பரபரப்பான அந்த 30 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நானும் அமர்ந்து நமது படையினர் பின்லேடனை சுட்டுக்கொன்ற பரபரப்பான அந்த நேரடி வீடியோவை பார்த்தேன்.
நமது வீரர்கள் சென்ற ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து செயலிழந்து போனதும், இன்னொரு ஹெலிகாப்டர் விரைந்துவந்து உதவியதும் வெற்றிகரமாக பின்லேடனை சுட்டுக் கொன்ற நமது சீல் படையினர் பின்லேடனின் பிரேதத்துடன் அதில் ஏற்றி அங்கிருந்து தப்பியதும் சுலபமான காரியம் அல்ல.
ஆனால், நமது கவுரவத்துக்குரிய ராணுவ நடவடிக்கைகளில் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் கூறுவதுபோல் தீவிரவாதிகளின் குடும்பத்தினரை சித்ரவதை செய்வது, கொல்வது போன்ற நமது சட்டத்துக்கு புறம்பான காரியங்களுக்கு எல்லாம் இடமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.