30% இடங்கள் நிரம்பாத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும். அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் ஒரு காலத்தில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் தற்போது பெட்டிக்கடைகள் போல ஆங்காங்கே எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் பல பொறியியல் கல்லூரிகள் முளைத்துவிட்டது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பாதியிலேயே வெளியேறி விடுகின்றனர்.
மேலும் பொறியியல் படித்தால் வேலை வாய்ப்பு குறைவு என்றும் பொறியியல் படித்த பலர் வேலையின்றி இருப்பதாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியால் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் பக்கம் மாணவர்கள் தங்கள் கவனத்தை செலுத்தாமல் மீண்டும் கலைக்கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் 30% இடங்கள் நிரம்பாத பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி குழு தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கை மூலம் புற்றீசல் போல் ஆங்காங்கே உருவாகியுள்ள பொறியியல் கல்லூரிகள் பல மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தரமற்ற கல்லூரிகள் மூடப்படுவதன் மூலம் பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் உயரும் என்று கல்வி ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.