உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மாயமான விமானியின் மனைவி உருக்கம்
கடந்த 8ஆம் தேதி மாயமான கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானத்தில் ஓட்டி சென்ற சுபாஷ் சுரேஷ் அவர்களின் மனைவி தீபலட்சுமி டுவிட்டரில் “சுபாஷ் நீங்கள் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும். உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று உருக்கமாக எழுதி உள்ளார். மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரு கோரிக்கை வைத்து உள்ளார். அதில், எனது கணவர் விமானி சுபாஷ்சுரேசை கடந்த 8 தினங்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க நீங்கள் தலையிட வேண்டும்” என கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆபரேஷன் ஆம்லா ஒத்திகையின்போது கடந்த 8 ஆம் தேதி புறப்பட்டு சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகள் சுபாஷ்சுரேஷ், எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரது நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. 3 பேருடன் மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்பட்டாலும், மூவரும் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என அவர்களுடைய குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மாயமான விமானி சுபாஷ்சுரேஷ், சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரைச் சேர்ந்தவர். சுபாஷின் தந்தை சுரேஷ் சென்னை துறைமுகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். அவரது தாய் பத்மா. 29 வயதான சுபாஷ்சுரேசுக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், இஷான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். பி.டெக் படித்த சுபாஷ்சுரேஷ் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் பைலட் பயிற்சியை முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு கடலோர காவல் படையில் சேர்ந்தார்.
கொச்சியில் பணியாற்றிய அவர், கடந்த டிசம்பர் மாதம் தான் சென்னைக்கு மாறுதலாகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி பணிக்கு சென்ற சுபாஷ்சுரேஷ், இரவு வீடு திரும்பிவிடுவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பாமல் மாயமாகி ஒரு வாரம் ஆவதால், அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.